நியூயார்க்கில் இந்திய இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பகுதி நேரமாக உணவு டெலிவரி செய்து வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குர்தீப் சிங் (28). இவர் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக அமெரிக்கா சென்று, நியூயார்க் நகரில் பகுதி நேரமாக உணவு டெலிவரி செய்யும் பணியைச் செய்து வந்தார்.
ஆகஸ்ட் 23ம் தேதி நியூயார்க்கின் ரிட்ச்மவுண்ட் தெருவில் குர்தீப் சிங் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரெனத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த குர்தீப் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள நியூயார்க் நகரக் காவல்துறையினர், தப்பியோடிய கொலையாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அமெரிக்காவில் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி கேட்டுப் பஞ்சாபில் உள்ள அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் உறைந்து போயுள்ளனர். குர்தீப் சிங்கின் உடலை விரைவாக இந்தியா கொண்டுவர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
