ஆட்டோவில் வந்து பச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற சம்பவம்!

 
child

 

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் உள்ள நியூ டவுன் பகுதியில் நள்ளிரவில் சென்ற ஆட்டோ ஒன்றிலிருந்து ஒரு பொருள் சாலையில் வீசப்பட்டது. உடனே அந்த ஆட்டோ மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றுவிட்டது. அந்தத் தருணத்தில் சாலையோரம் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே அந்த வழியாகச் சென்ற சில வாலிபர்கள் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

ஆட்டோவில் சென்றவர்கள்தான் அந்தக் குழந்தைச் சால்வை மற்றும் சிறு மெத்தையில் சுற்றி வீசிச் சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்தக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவித்தனர். கண்காணிப்பு கேமரா மூலமாகக் குழந்தையை வீசிச் சென்றது யார் என்று போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே குழந்தையைத் தாங்கள் வளர்த்துக்கொள்வதாகக் கூறிப் பலர் மருத்துவமனைக்கு வந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் குழந்தையைக் கொடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுமாறும் மருத்துவர்கள் அவர்களிடம் தெரிவித்தனர்.