புதுமணத் தம்பதி உயிரிழப்பு... எமனாக வந்து பைக் மீது மோதிய கார்!
Oct 31, 2026, 07:08 IST
கர்நாடக மாநிலம் சிந்தாமணி அருகே, கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் புதுமணத் தம்பதி உயிரிழந்த சம்பவம் இரு குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிந்தாமணி–பெங்களூரு சாலையில், சின்னசந்திரா அருகே நேற்று முன் தினம் இரவு இந்த விபத்து நிகழ்ந்தது. மின்சார பைக்கில் சென்று கொண்டிருந்த சண்முகா (27), அவரது மனைவி மிதிலா (24) ஆகியோர் மீது எதிரே வந்த கார் மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் இருசக்கர வாகனமும் காரும் சேதமடைந்தன.
காரில் பயணம் செய்த 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிந்தாமணி ஊரகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருமண வாழ்க்கையைத் தொடங்கிய சில மாதங்களிலேயே தம்பதியினர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களையும் அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
