தற்கொலையைத் தடுக்க முயன்ற புதுமாப்பிள்ளை ரயிலில் அடிபட்டு மரணம்... தஞ்சை அருகே சோகம்!

 
ரயிலில் புதுமாப்பிள்ளை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற முதியவரைக் காப்பாற்றச் சென்ற ரயில்வே கேட் கீப்பர், ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராகுல் (30) என்பவர் தெற்கு ரயில்வேயில் பணியாற்றி வந்த நிலையில், தஞ்சை மாவட்டம் கோபுராஜபுரம் (பாபநாசம் அருகே) ரயில்வே கேட்டில் கேட் கீப்பராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்குத் திருமணமாகி 6 மாதங்களே ஆகின்றன. நேற்று இரவு 11.30 மணியளவில் நாகர்கோவில் - தாம்பரம் 'அந்தியோதயா எக்ஸ்பிரஸ்' ரயில் அவ்வழியாக வந்தபோது, 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார்.

ரயில் தண்டவாளம் தற்கொலை

முதியவர் தற்கொலை செய்ய முயற்சிப்பதை உணர்ந்த ராகுல், உடனடியாக ஓடிச்சென்று அவரைக் காப்பாற்றப் போராடினார். ஆனால் எதிர்பாராதவிதமாக வேகமாகக் வந்த ரயில் இருவர் மீதும் பயங்கரமாக மோதியது. ரயில் மோதிய பலத்த காயத்தில் ராகுல் மற்றும் அந்த முதியவர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார், உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகக் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த முதியவர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும், இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஆறே மாதங்களில், பிற உயிரைக் காப்பாற்ற முயன்று புதுமாப்பிள்ளையான கேட் கீப்பர் ராகுல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களையும் ரயில்வே ஊழியர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.