தவெக MLA அருள் விக்னேஷ் மீது அடுத்த புகார்... மதுபோதையில் மிரட்டியதாக ஹோட்டல் ஊழியர் குற்றச்சாட்டு!

 
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் மதுபோதையில் தனது வாகனத்தின் மீது மோதிவிட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாக அவரது வீட்டின் அருகிலுள்ள ஹோட்டல் பணியாளர் சுரேஷ் பரபரப்புப் புகார் தெரிவித்துள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி தொகுதிக்கு அவர் எந்தப் புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை எனச் சுரேஷ் பேட்டியளித்தபோது, அங்கிருந்த த.வெ.க. தொண்டர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, காவல்துறையினர் மூலம் பணிபுரியும் இடத்திலிருந்து வெளியேற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் இல்லத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வரும் சுரேஷ் என்பவர், எம்.எல்.ஏ. மதுபோதையில் தனது வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். விபத்து குறித்துக் கேட்டபோது, அருள் விக்னேஷ் தன்னைத் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்ததாகவும் சுரேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கள்ளக்குறிச்சி தொகுதியின் வளர்ச்சிக்காக எந்தவொரு புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை எனக் குற்றம் சாட்டி ஹோட்டல் பணியாளர் சுரேஷ் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.

பத்மஜா கள்ளக்குறிச்சி

சுரேஷ் பேட்டியளித்துக் கொண்டிருந்த போதே, அங்குத் திரண்ட த.வெ.க. தொண்டர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், காவல்துறையினர் தலையிட்டுச் சுரேஷை அவர் பணிபுரியும் இடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது தற்போது மற்றுமொரு புகார் எழுந்திருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.