7 நாட்கள்... 168 மணி நேரம் இடைவிடாமல் நடனம்! கின்னஸ் சாதனை படைத்த நைஜீரிய நடனக் கலைஞர்... வைரல் வீடியோ!

 
கின்னஸ்

 

நைஜீரியாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் பெஞ்சமின் டேனியல் கேப்ரியல், ‘பென் டான்சர்’ என அழைக்கப்படுகிறார். இவர் கின்னஸ் உலக சாதனைக்கான 168 மணி நேர நடன சவாலை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.லாகோஸில் உள்ள ஃப்ரீடம் பார்க் பகுதியில் செப்டம்பர் 21 முதல் 27-ம் தேதி வரை ஏழு நாட்கள் இந்த நடன சவால் நடைபெற்றது. மொத்தம் 168 மணி நேரம் நடனமாடும் இலக்குடன் பெஞ்சமின் டேனியல் கேப்ரியல் இந்த முயற்சியை மேற்கொண்டார்.

தற்போது கின்னஸ் உலக சாதனை அமைப்பின் அதிகாரப்பூர்வ பதிவின்படி, தனிநபருக்கான அதிக நேர நடன மாரத்தான் சாதனை இந்தியாவைச் சேர்ந்த ஸ்ருஷ்டி சுதிர் ஜாக்தாப் பெயரில் உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் 2023-ம் ஆண்டு அவர் 127 மணி நேரம் நடனமாடி இந்த சாதனையை படைத்தார். அப்போது அவருக்கு 16 வயது.

இந்த நிலையில், பெஞ்சமின் 168 மணி நேர இலக்கை நிறைவு செய்திருப்பதன் மூலம், தற்போதைய 127 மணி நேர சாதனையைவிட 41 மணி நேரம் அதிகமாக நடனமாடியுள்ளார்.பெஞ்சமினின் இந்த முயற்சி வெறும் சாதனை முயற்சியாக மட்டுமின்றி, ஆப்பிரிக்க நடன கலாச்சாரத்தை உலக அளவில் வெளிப்படுத்தும் நோக்கத்துடனும் நடத்தப்பட்டுள்ளது. சவாலின்போது ஆஃப்ரோபீட்ஸ், ஃபுஜி, ஜாஸ், ஸூக் உள்ளிட்ட இசை வகைகளுக்கு அவர் நடனமாடியதுடன், பாரம்பரிய நைஜீரிய ஆடைகளையும் அணிந்தார்.

33 வயதான பெஞ்சமின் டேனியல் கேப்ரியல், 18 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்முறை நடனத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் நடனக் கலைஞர், நடன அமைப்பாளர் மற்றும் பெண்டான்சர் அகாடமி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.ஏழு நாட்கள் நடைபெற்ற இந்த முயற்சியை காணவும் அவருக்கு ஆதரவு அளிக்கவும் லாகோஸில் ஏராளமான இளைஞர்கள் திரண்டனர். இந்த நிகழ்வு தொடர்பான காட்சிகளும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

Nigerian attempts to break world record by dancing non-stop for seven days - Yahoo News Canada

எனினும், பெஞ்சமின் டேனியல் கேப்ரியல் தற்போது அதிகாரப்பூர்வ கின்னஸ் உலக சாதனை படைத்தவர் என்று கூற முடியாது. அவரது முயற்சிக்கான ஆதாரங்களை கின்னஸ் உலக சாதனை அமைப்பு பரிசீலித்து, விதிமுறைகளுக்கு ஏற்ப அங்கீகரித்த பின்னரே புதிய சாதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும். தற்போதைய கின்னஸ் பதிவில் ஸ்ருஷ்டி சுதிர் ஜாக்தாப்தான் 127 மணி நேர சாதனையாளராக உள்ளார்.