நிலக்கோட்டை கருப்பண்ணசாமி கோயில் திருவிழா... 102 கிடாய் வெட்டி விடிய விடிய கறிவிருந்து!

 
கிடாய்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தருமத்துப்பட்டியில் நடைபெற்ற கோட்டை கருப்புசாமி கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில், 102 கிடாய்கள் பலியிட்டு விடிய விடிய கறி விருந்து நடைபெற்றது.தருமத்துப்பட்டி கிராமத்தில் உள்ள கோட்டை கருப்புசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பாரம்பரிய திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி, சுமார் 15 நாட்களுக்கு முன்பு சாமி சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கறி சோறு கடா விருந்து

தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்த விரும்புவோருக்கு தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு சுமார் 7 மணியளவில் 102 கிடாய்களுடன் ஏராளமான ஆண்கள் கோவிலுக்கு வந்தனர். கிடாய்கள் பூசாரியிடம் ஒப்படைக்கப்பட்டன.

பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நள்ளிரவில் விளக்குகள் அணைக்கப்பட்டு, தீப்பந்தங்கள் ஏந்தியபடி பாரம்பரிய முறையில் வழிபாடு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நேர்த்திக்கடனாக கொண்டு வரப்பட்ட கிடாய்கள் கருப்புசாமிக்கு பலியிடப்பட்டு படைக்கப்பட்டன.

பின்னர் கிடாய்களின் இறைச்சியைக் கொண்டு கறி மற்றும் சாதம் சமைக்கப்பட்டது. விடிய விடிய நடைபெற்ற இந்த சிறப்பு சமையல் மற்றும் கறி விருந்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர்.இந்த கறி விருந்து கருப்புசாமியின் அருள் பெற்ற பிரசாதமாக கருதப்படுவதாகவும், நேர்த்திக்கடன் செலுத்துவதன் மூலம் குடும்பத்தில் நலமும் வளர்ச்சியும் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறி விருந்து

தருமத்துப்பட்டி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆண்கள் இந்த பாரம்பரிய திருவிழாவில் கலந்து கொண்டனர். ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் தனித்துவமான வழிபாட்டு முறையால் தருமத்துப்பட்டி கோட்டை கருப்புசாமி கோவில் திருவிழா கவனம் பெற்றுள்ளது.