நீலகிரியில் கொடூரம்: புலி தாக்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளி பலி; ஒரே மாதத்தில் 2-வது உயிரிழப்பால் பரபரப்பு!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி லார்ஸ்டன் பகுதியில், தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவரைப் புலி தாக்கிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஓவேலி லார்ஸ்டன் பகுதியில் பணிபுரிந்து வந்த ரவி என்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளியைப் புலி திடீரெனத் தாக்கியுள்ளது. அவரது உடலைக் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்று புலி கடித்துக் கொன்றுள்ளது. ரவியின் சடலத்தைக் கைப்பற்றிய வனத்துறையினர், அதை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி இதே பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் புலி தாக்கி உயிரிழந்த நிலையில், தற்போது ரவி உயிரிழந்ததன் மூலம் ஒரே மாதத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அப்பகுதித் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இரண்டு பேரைக் கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வரும் அந்தப் புலியை உடனடியாகப் பிடிக்கத் தலைமை வனவிலங்கு பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா உத்தரவிட்டுள்ளார்.
தேவைப்பட்டால் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், புலமார்க்கத்தைக் தீவிரமாகக் கண்காணிக்க அப்பகுதியில் 44 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு வனத்துறைத் தனிப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
