"நிர்மல் குமார் இல்ல.. கலெக்ஷன் குமார்" - செந்தில் பாலாஜி விமர்சனம்!
தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக முறையாகத் டெண்டர் கோராமல், அவசரகதியில் அதிக விலைக்கு வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தவெக அரசின் முறையற்ற மின் கொள்முதல் கொள்கை குறித்தும், அமைச்சர் நிர்மல் குமார் மீதும் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் செந்தில் பாலாஜி பேசுகையில், பொதுவாகவே மின் தேவையில் 5 முதல் 7 சதவீதம் வரை கூடுதல் தேவை ஏற்படும் என்பது முன்கூட்டியே கணிக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால், கடந்த 5 மாதங்களாக எந்தவிதமான டெண்டரும் போடாமல் காலம் தாழ்த்திவிட்டு, தற்போது வெறும் 5 நாட்களில் அவசரகதியில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 என்ற வரலாறு காணாத அதிக விலைக்குக் கொள்முதல் செய்வது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த காலங்களில் வெளிச்சந்தையில் ரூ.20-க்கு மின்சாரம் வாங்கிய போதே, அன்றைக்கு எதிர்க்கட்சியிலிருந்தவர்கள் "முதலமைச்சர் பதவி விலக வேண்டும்" என்று முழக்கமிட்டனர். ஆனால், இன்று அதே நாற்காலியில் அமர்ந்து கொண்டு யூனிட் ஒன்றுக்கு ரூ.35 கொடுத்து மின்சாரம் வாங்குவதை எந்த வகையில் சேர்ப்பது என்று செந்தில் பாலாஜி சாடினார்.
தற்போதைய அரசின் நிர்வாகத் திறமையின்மையால் தலைநகரில் உள்ள மிக முக்கிய இடமான தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு ஏற்படும் அவல நிலை நிலவுகிறது. இது இந்த 'ரீல்ஸ் ஆட்சி' எவ்வளவு மோசமான நிலையில் இயங்குகிறது என்பதற்குச் சாட்சியாகும் என்று அவர் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசின் சொந்த மின் உற்பத்தியை 30 முதல் 35 சதவீதமாகத் தற்போதைய அரசு திட்டமிட்டுக் குறைத்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். இதற்குக் காரணம் தமிழக மின்வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி நிலையங்களைச் செயல்பட விடாமல் முடக்கிவிட்டு, வெளிச்சந்தையில் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கும் முறையை அமைச்சர் நிர்மல் குமார் கையாள்வது தான் என்று அவர் தெரிவித்தார்.

ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 முதல் ரூ.37 வரை கொடுத்து வாங்குவது மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்ட செந்தில் பாலாஜி, அமைச்சர் நிர்மல் குமாரைக் கடுமையாகக் கேலி செய்யும் விதமாக, "இவர் நிர்மல் குமார் இல்லை.. கலெக்ஷன் குமார்!" என்று கலாய்த்துத் தள்ளினார்.
வெளிச்சந்தையில் இவ்வளவு கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவது மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த நிதிநிலையையும் முற்றிலுமாகச் சீரழித்துவிடும் என்றும், திமுக ஆட்சியில் மின் தேவை பல மடங்கு அதிகரித்த போதிலும் எங்குமே மின்வெட்டு ஏற்படாத வகையில் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மின் கொள்முதல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
