8 நாட்கள் சுற்றுப்பயணம்... இன்று அமெரிக்கா புறப்படுகிறார் நிர்மலா சீதாராமன்!

 
நிர்மலா சீதாராமன்

 

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை மந்திரி நிர்மலா சீதாராமன், இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும் ஜி20 (G20) அமைப்பின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கவும் இன்று ஆகஸ்ட் 25ன் தேதி முதல் செப்டம்பர் 2 வரை கனடா மற்றும் அமெரிக்காவிற்கு 8 நாட்கள் அரசுமுறைச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

டொராண்டோவில் கனடா நாட்டின் நிதி மற்றும் தேசிய வருவாய் துறை மந்திரி பிரான்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயினுடன் இணைந்து தொடக்க 'பொருளாதார மற்றும் நிதிசார் உரையாடலில்' நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.

நிர்மலா சீதாராமன்

செயற்கை நுண்ணறிவு, முக்கிய கனிமங்கள் மற்றும் ஆற்றல் துறைகளைச் சேர்ந்த முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் முதலீட்டு வட்டமேஜை மாநாடுகளில் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு: டொராண்டோவில் வசிக்கும் இந்திய சமூகத்தினரையும் சந்தித்துக் கலந்துரையாட உள்ளார்.

ஆகஸ்ட் 28 முதல் தொடங்கும் அமெரிக்கப் பயணத்தில், சிகாகோ நகரில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை சந்தித்து இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

நிர்மலா சீதாராமன்

வட கரோலினாவின் ஆஷ்வில் நகரில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் அமெரிக்கத் தலைமையில் நடைபெறும் ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் இந்தியக் குழுவிற்குத் தலைமை தாங்குகிறார். பயணத்தின் இறுதிப் பகுதியாக நியூயார்க்கில் நிதித்துறை நிர்வாகிகளைச் சந்திப்பதுடன் நாஸ்டாக் (NASDAQ) பங்குச் சந்தையின் பாரம்பரிய மணி அடிக்கும் நிகழ்விலும் பங்கேற்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.