நித்யா கொலையில் திடீர் திருப்பம்... காதலனே கொன்று தீ வைத்து எரித்தது அம்பலம்!

 
நித்யா

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் போடிநாயக்கனூர் பரமேஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த நித்யா (18) என்பவரும், இடுக்கி மாவட்டம் ராஜகுமாரி வட்டப்பாறை பி டிவிசனைச் சேர்ந்த நிஷாந்த் (19) என்பவரும் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்துவிட்டனர். 

நித்யா காதல் கொலை இளம்பெண்

இந்நிலையில், திடீரென நித்யாவைத் தொடர்புகொண்ட நிஷாந்த், தங்களது உறவு குறித்தும், திருமணம் செய்துக் கொள்வது குறித்தும் நேரில் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் எனக் கூறி பூப்பாராவிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதனை நம்பிச் சென்ற நித்யா, கடந்த அக்டோபர் 11ம் தேதியன்று மதியம் சுமார் 2:30 மணியளவில் பூப்பாராவில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் நிஷாந்தைச் சந்தித்துள்ளார்.

ஆரம்பத்தில் இருவரும் வழக்கம் போலப் பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரெனப் பேச்சுவார்த்தை முற்றி கடுமையான வாக்குவாதமாக மாறியுள்ளது. ஆத்திரமடைந்த நிஷாந்த், நித்யாவின் கழுத்தை நெரித்துக் கொன்றதுடன், அவர் இறந்து விட்டதை உறுதி செய்வதற்காகக் கல்லால் பலமுறை முகத்திலும் தலையிலும் பலமாக தாக்கி முகத்தை சிதைத்துள்ளார். 

நித்யா

அதன் பின்னர், கொலையை மறைக்கும் நோக்கத்துடன் அவரது உடலின் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து எரித்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தித் குற்றவாளி நிஷாந்தை உடனடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.