ராஜ்யசபா எம்.பி.யாக நிதிஷ்குமார் பதவியேற்பு - பீகார் முதலமைச்சர் பதவியை விரைவில் ராஜினாமா செய்கிறார்?!
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த எளிமையான நிகழ்வில், முக்கியத் தலைவர்கள்: மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, நிர்மலா சீதாராமன், ராஜிவ் ரஞ்சன் சிங் மற்றும் பீகார் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி ஆகியோர் கலந்துகொண்டனர். நிதிஷ்குமார் இந்தி மொழியில் எம்.பி.யாகப் பதவியேற்றுக் கொண்டார். நிதிஷ்குமார் எம்.பி.யாகப் பதவியேற்றுள்ளதால், பீகாரில் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன.

டெல்லியில் இருந்து பாட்னா திரும்பியதும், இன்னும் ஓரிரு நாட்களில் நிதிஷ்குமார் தனது முதலமைச்சர் பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பீகாரில் முதன்முறையாக பாஜக-வைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக நியமிக்க அக்கட்சியின் மேலிடம் ஆலோசித்து வருகிறது. தற்போதைய துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி இந்தப் பதவிக்கான ரேஸில் முன்னிலையில் உள்ளார். ஏப்ரல் 15 அல்லது 16-ம் தேதிகளில் புதிய அமைச்சரவை பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2005-ம் ஆண்டு முதல் (சிறு இடைவெளிகள் தவிர்த்து) சுமார் 21 ஆண்டுகளாகப் பீகார் முதலமைச்சராகப் பணியாற்றி வந்த நிதிஷ்குமார், இப்போது தேசிய அரசியலுக்குத் திரும்பியுள்ளார். இது பீகார் அரசியலில் ஜே.டி.யு (JD-U) மற்றும் பாஜக இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது.
