ஹார்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்கள் பயணிக்க தடையில்லை.. 4 நாடுகளுக்கு ஈரான் அனுமதி!

 
இந்தியா கப்பல் ஹார்முஸ் எண்ணெய் ஏற்றுமதி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான ராணுவப் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், உலக அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள ஹார்முஸ் நீரிணை கடல் வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளில் இருந்து இந்தியாவுக்கு முழு விலக்கு அளிப்பதாக ஈரான் நாடாளுமன்றக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலகப் பொருளாதாரத்திலும் சர்வதேசக் கடல்சார் வர்த்தகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த முக்கியச் சலுகை, இந்தியாவுடன் சேர்த்து சீனா, ஈராக் மற்றும் கட்டார் ஆகிய 4 நாடுகளுக்கு மட்டுமே பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் வர்த்தகக் கப்பல்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 4 நாடுகளின் வணிகக் கப்பல்கள் எவ்வித தடையுமின்றி ஹார்முஸ் நீரிணையைக் கடக்க ஈரான் அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

கப்பல் ஹார்மூஸ் ஹார்முஸ் மாலுமி ஏற்றுமதி சரக்கு

இந்தியாவில் இருந்து ஈரானுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தங்குதடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் ஈரான் இந்த முடிவை எடுத்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்ல இந்திய மற்றும் சீனக் கப்பல்களிடமிருந்து ஈரான் வழக்கம் போல் பயணக் கட்டணத்தை வசூலிக்கும். அதே வேளையில், கத்தார் நாட்டைச் சேர்ந்த கப்பல்களுக்குப் பயணக் கட்டணத்திலிருந்தும் முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஈரான் நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் கப்பல்

ஈரானின் இந்த அறிவிப்பு இந்திய அரசுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது. ஏனெனில் இந்தியாவின் ஒட்டுமொத்தக் கச்சா எண்ணெய் இறக்குமதி தேவையில் சுமார் 30 சதவீதம் இந்த ஹார்முஸ் நீரிணை கடல் பாதை வழியாகவே கொண்டு வரப்படுகிறது. சமையல் எரிவாயுவான எல்.பி.ஜி  இறக்குமதியில் 90 சதவீதம் அளவுக்கு இந்தப் பாதையையே சார்ந்துள்ளது.

மத்திய கிழக்கில் யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையிலும், ஈரானின் இந்த விலக்கு காரணமாக இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்றி தடையின்றி கிடைப்பது தற்போதைக்கு உறுதியாகியுள்ளது.