சிறுசேமிப்பு வட்டி விகிதங்களில் மாற்றமில்லை - மத்திய அரசு அறிவிப்பு!

 
வட்டி விகிதம்

மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை மாற்றமின்றி அப்படியே தொடர முடிவு செய்துள்ளது. நடுத்தர மற்றும் மூத்த குடிமக்கள் குடும்பங்களின் சேமிப்புத் திட்டங்களுக்கு இது ஒரு நிலையான வருவாயை உறுதி செய்கிறது. தொடர்ந்து 9-ஆவது காலாண்டாக இந்த சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் ஒரே சீராக நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக செயல்படுத்தப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSY)  திட்டத்திற்கு அதிகபட்சமாக 8.20% வட்டி விகிதம் அப்படியே நீடிக்கிறது. முதியவர்களுக்கான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS)  சிறப்பு சேமிப்பு திட்டத்திற்கும் 8.20% வட்டி வழங்கப்படுகிறது. தேசிய சேமிப்பு பத்திரம் (NSC) வட்டி விகிதம் 7.70% ஆக தொடர்கிறது.

சேமிப்பு

விவசாயிகளுக்கான கிசான் விகாஸ் பத்ரா (KVP)  திட்டத்தில் 7.50% வட்டி நீடிப்பதுடன், முதலீடு செய்த பணம் 115 மாதங்களில் இரட்டிப்பாகும். அஞ்சலக 5 ஆண்டு நேரடி வைப்புத்தொகை டெபாசிட்டுகளுக்கு 7.50% வட்டி வழங்கப்படுகிறது. நிலையான மாத வருமானம் தரும் மாதாந்திர வருமான திட்டம் (POMIS) திட்டத்திற்கு 7.40% வட்டி விகிதம் மாறாமல் உள்ளது. நீண்டகால முதலீடான பிபிஎஃப் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்திற்கு வழக்கம் போல 7.10% வட்டி விகிதம் நீடிக்கிறது.

மாதந்தோறும் சிறு தொகையை சேமிக்கும் அஞ்சலக 5 ஆண்டு தொடர் வைப்பு நிதி ஆர்டி திட்டத்திற்கு 6.70% வட்டி தொடர்கிறது. அஞ்சலக சாதாரண சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் 4.00% ஆக நீடிக்கிறது.

பிபிஎஃப் சேமிப்பு

வழக்கமாக சந்தை நிலவரங்கள், பணவீக்கம் மற்றும் அரசு பத்திரங்களின் வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சகம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த வட்டி விகிதங்களை மறுபரிசீலனை செய்யும். தற்போது நிலவி வரும் பொருளாதார சூழலில் முதலீட்டாளர்களுக்கு ஒரு நிலையான நம்பகத்தன்மையை வழங்கும் நோக்கில் இந்த வட்டி விகிதங்கள் மாற்றமின்றி நீட்டிக்கப்பட்டுள்ளன.