“பயங்கரவாதத்தில் சமரசம் இல்லை” - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி முழக்கம்!
இஸ்ரேல் நாடாளுமன்றமான 'நெசெட்'-டில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்ற வரலாற்றுச் சிறப்போடு, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை நரேந்திர மோடி உலக அரங்கில் பதிவு செய்துள்ளார்.
பிரதமர் மோடியின் உரையில், "பயங்கரவாதத்திற்கு எதிராகப் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை மற்றும் சமரசமற்ற கொள்கையை இந்தியா கொண்டுள்ளது. பொதுமக்களின் உயிர் பலியை எந்தக் காரணத்திற்காகவும் நியாயப்படுத்த முடியாது" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

2023 அக்டோபரில் ஹமாஸ் நடத்திய தாக்குதலின் வலியை இந்தியா உணர்வதாகவும், மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் வடுக்களைச் சுமந்து நிற்கும் இந்தியாவிற்கு இஸ்ரேலின் துயரம் புரியும் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். "இந்த இக்கட்டான தருணத்தில் இந்தியா முழு நம்பிக்கையுடன் இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறது" எனத் தனது ஆதரவை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தினார்.
பிராந்தியத்தில் நீடித்த அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் அனைத்து சர்வதேச முயற்சிகளுக்கும் இந்தியா தனது ஆதரவை வழங்கும் என்றார். 2006-ல் குஜராத் முதலமைச்சராகவும், 2017-ல் பிரதமராகவும் இஸ்ரேல் வந்ததை நினைவு கூர்ந்த அவர், வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பிரதமர் மோடியின் உரைக்கு முன்னதாகப் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "உலக அளவில் பிரதமர் மோடி ஒரு சிறந்த தலைவர்" எனப் பாராட்டியதுடன், இரு நாடுகளின் நட்பு 'சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது' என்றும் குறிப்பிட்டார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரையைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய 'சபாநாயகர் பதக்கம்' வழங்கிக் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
