ரேஷன் கடைகளில் பாமாயில் விநியோகம் கிடையாது; சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

 
ரேஷன் பாமாயில்

வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் தமிழகத்தில் உள்ள பொது விநியோகத் திட்டமான ரேஷன் கடைகள் மூலமாகப் பாமாயில் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், முதல் கட்டமாக 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை வழங்குவதற்கான அரசாணைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. பாமாயில் விநியோக ஒப்பந்தத்தைப் பெற்ற பல்வேறு நிறுவனங்களுக்கு இடையில் முறையான விகிதாசாரத்தின் அடிப்படையில் பாக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பாமாயில், சோயாபீன்ஸ், சூரியகாந்தி எண்ணெய்க்கான வரியை குறைத்தது மத்திய அரசு

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தடையின்றிப் பாமாயில் வழங்குவதற்காக அரசு சார்பில் குறிப்பிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையைக் கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் விநியோகம் செய்வதற்காக முதல் கட்டமாக இரண்டு கோடி பாமாயில் பாக்கெட்டுகளைக் கொள்முதல் செய்து விநியோகிப்பதற்கான உத்தரவு கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையில், பாமாயில் விநியோக ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்களுக்கு இடையில் ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் இருப்பதாகவும், தங்களுக்குரிய முறையான விகிதாசாரத்தில் பாக்கெட்டுகள் ஒதுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டி 'கேடிவி ஹெல்த் ஃபுட்' நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

பாமாயில்

இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் மற்றும் ஆவணங்களை நீதிமன்றம் பரிசீலித்தது. ஒப்பந்த விதிகள் மற்றும் விகிதாசார ஒதுக்கீடு தொடர்பான நடைமுறைகளில் முரண்பாடுகள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, கடந்த செப்டம்பர் 29 அன்று பிறப்பிக்கப்பட்ட பாமாயில் விநியோக உத்தரவுக்கு நவம்பர் 2-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் ரேஷன் கடைகளில் பாமாயில் விநியோகம் தடைபடும் சூழல் உருவாகியுள்ளதால் இந்த விவகாரம் பொதுமட்டத்திலும் வர்த்தக வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.