புதிய மின் இணைப்பு பெறுவதில் அதிரடி மாற்றம் - 4 கிலோவாட் வரை கள ஆய்வு இல்லை - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்காக புதியதாக மின் இணைப்பு கோரி விண்ணப்பிப்பவர்களுக்கான நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 4 கிலோவாட் வரை மின் இணைப்பு கோருவோருக்கு நாளை முதல் நேரடி கள ஆய்வு இல்லாமல் மின் இணைப்பு வழங்கப்படும் எனத் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களுடன், மின் இணைப்பு வழங்கப்பட வேண்டிய இடத்தின் ஜிபிஎஸ் இருப்பிடக் குறியீடுகளை விண்ணப்பதாரரே நேரடியாகப் பதிவு செய்ய வேண்டும். ஆவணங்களின் அச்சு நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

விண்ணப்பதாரர் வழங்கும் ஜிபிஎஸ் தகவல்கள் ஜிஐஎஸ் செயலி மூலம் சரிபார்க்கப்படும். தகவல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், எந்தவிதமான கள ஆய்வும் இன்றி விண்ணப்பம் அடுத்த கட்டப் பணிக்கு அனுப்பப்படும்.
ஜிபிஎஸ் சரிபார்ப்பு முடிந்த பிறகு மதிப்பீடு செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்கப்படும். எனினும், வீட்டின் உள்ளே மின் சாதனங்கள் பொருத்தப்பட்டுத் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் குறைபாடுகள் சரிசெய்யப்படாவிட்டால் விண்ணப்பம் ரத்து செய்யப்படும்.
ஜிபிஎஸ் சரிபார்ப்பில் தவறுகள் கண்டறியப்பட்டால் அல்லது சரிபார்ப்பு தோல்வியுற்றால், வழக்கமான கள ஆய்வு நடைமுறைக்கேற்ப விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். இந்த புதிய முறை புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
