புற்றுநோய் சிகிச்சைக்குப் பணம் இல்ல ... மும்பை அருகே ஒரே குடும்பத்தின் 3 பேர் உயிரிழப்பு!

 
புற்றுநோய்

 

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மற்றும் சகோதரி என மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்குப் போதிய பணம் கிடைக்காததால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே இந்தத் துயர முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

விரார் மேற்குப் பகுதியில் உள்ள குளோபல் சிட்டி அடுக்குமாடிக் குடியிருப்பில் தீபக் மன்சுக்லால் மேத்தா (52), குமார் மன்சுக்லால் மேத்தா (50), அவர்களது சகோதரி கேவ்னா (48) ஆகியோர் வசித்து வந்தனர். வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்ற போலீசார், மூவரும் உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டனர்.

விசாரணையில், குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததும், அவரது சிகிச்சைக்காக உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உதவி கேட்டும் தேவையான பணத்தைத் திரட்ட முடியாமல் குடும்பத்தினர் சிரமப்பட்டதும் தெரியவந்துள்ளது.

மூவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விஷம் உட்கொண்டதால் உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.