டெல்லி ஜந்தர் மந்தரில் இனிப் போராட்டம் நடத்த அனுமதியில்லை - 3 மாற்று இடங்களை அறிவித்தது காவல்துறை!

 
டெல்லி ஜந்தர் மந்தர்

தலைநகர் டெல்லியில் பல ஆண்டுகளாகப் போராட்டங்களின் மையமாக விளங்கி வந்த ஜந்தர் மந்தரில் இனிப் போராட்டம் நடத்தக் அனுமதி கிடையாது என்று டெல்லி காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போராட்டம் நடத்துவதற்கான அங்கீகரிக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மக்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த முறையான அனுமதி பெற்ற இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் டெல்லியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட முக்கிய இடங்களின் பட்டியலில் ஜந்தர் மந்தர் முதன்மையாக இருந்தது. தற்போது இந்தப் பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டுள்ளது.

டெல்லி தடியடி

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தி 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' அமைப்பினர் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் திடீர் போராட்டத்தினால் தலைநகர் டெல்லியில் சாலை, ரயில் மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும், ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட சிஜேபி அமைப்பு திட்டமிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

டெல்லி

மத்திய உள்துறை அமைச்சகக் குழுவின் பரிந்துரைப்படி, டெல்லியில் இனிப் போராட்டம் நடத்த மூன்று இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ராம் லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் கிழக்கு டெல்லி சிபிடி மைதானம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே உரிய அனுமதி பெற்றுப் போராட்டங்களை நடத்த முடியும் என்று டெல்லி காவல்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.​​​​​​​