இனி கிழியாது, கசங்காது.. ரூ.10, ரூ.20 பிளாஸ்டிக் நோட்டுகள் 200 கோடி அச்சிட ஒப்புதல் - மத்திய அரசு நடவடிக்கை
நாடு முழுவதும் புழக்கத்தில் பற்றாக்குறையாக உள்ள ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான காகித ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக, பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு அறிமுகப்படுத்த ஒன்றிய அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான நோட்டுகளில் தலா 100 கோடி நோட்டுகள் (மொத்தம் 200 கோடி நோட்டுகள்) முதற்கட்டமாகக் களச் சோதனைக்காகவும், தொடர்ந்து வழக்கமான புழக்கத்திற்காகவும் அச்சிடப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

காகித ரூபாய் நோட்டுகளை முழுமையாகத் தடை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும், காகித நோட்டுகளுடன் சேர்ந்து இந்த பிளாஸ்டிக் நோட்டுகளும் ஒரே நேரத்தில் புழக்கத்தில் இருக்கும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் அல்லது பாலிமர் நோட்டுகள் 'பையாக்சியலி ஓரியண்டட் பாலிப்ரோப்பிலீன்' என்ற சிறப்பு வகை பிளாஸ்டிக் பொருளால் தயாரிக்கப்படுகின்றன. இவை சாதாரணப் பருத்தி-காகித நோட்டுகளை விட 2.5 முதல் 4 மடங்கு அதிக காலம் உழைக்கக்கூடியவை.
இவை நீராலும் அழுக்காலும் எளிதில் பாழாகாது; கசங்கவோ, கிழியவோ செய்யாது. மேலும், உயர் தொழில்நுட்பப் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டிருப்பதால் இவற்றை எளிதில் கள்ள நோட்டாகத் தயாரிக்க முடியாது. ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ருமேனியா, புருனே மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் ஏற்கனவே பிளாஸ்டிக் நோட்டுகளை முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றன.
பிளாஸ்டிக் நோட்டுகளுக்கான மூலப்பொருட்களைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் டெண்டர் (ஒப்பந்தப்புள்ளி) கோரியுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் தொடர்புடைய மூலப்பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் ஒன்றிய அரசும் ரிசர்வ் வங்கியும் மிகவும் உறுதியாக உள்ளன. எனவே, அனைத்துக் பாதுகாப்பு அம்சங்களையும் பரிசீலித்து புதிய நோட்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
