இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் 135 இடங்களில் நெட்வொர்க்கே இல்ல... வாகன ஓட்டிகளே உஷார்!

 
mobile mobile


இந்தியாவில் சுமார் 64 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலை வசதிகள் இருந்தாலும், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு புதிய தலைவலி உருவெடுத்துள்ளது. மலைகள், காடுகள் எனப் பல கடினமான நிலப்பரப்புகளைக் கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில்  பல இடங்களில் செல்போன் சிக்னல் சுத்தமாகக் கிடைப்பதில்லை எனப் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதனைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம்  நடத்திய அதிரடி ஆய்வில், நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 135 இடங்களில் 'நெட்வொர்க்' பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, விபத்து போன்ற அவசர காலங்களில் கூட யாரையும் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு இந்த இடங்கள் "கம்யூனிகேஷன் பிளாக் அவுட்" மண்டலங்களாக உள்ளன.

எந்தெந்த மாநிலங்களில் பாதிப்பு அதிகம்?

கர்நாடகா: 36 இடங்களில் நெட்வொர்க் சுத்தமாக இல்லை (முதலிடம்).

ராஜஸ்தான்: 23 இடங்கள்.

ஆந்திரா: 22 இடங்கள்.

தமிழ்நாடு: தமிழகத்தைப் பொறுத்தமட்டில் 3 முக்கிய இடங்களில் இந்த நெட்வொர்க் சிக்கல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 135 இடங்களும் பெரும்பாலும் குடியிருப்புகள் இல்லாத பகுதிகள், அடர்ந்த காடுகள் மற்றும் மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள சாலைகள் ஆகும். இந்தச் சிக்கலைத் தீர்க்கத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து புதிய கோபுரங்களை  அமைக்கத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு வருகிறது. நெடுஞ்சாலையில் செல்லும் பயணிகள், குறிப்பாக இரவு நேரங்களில் இத்தகைய "நெட்வொர்க் இல்லாத" பகுதிகளில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.