"அஜித் கேட்கும் சம்பளத்தை யாராலும் தர முடியாது" - 'டேர்டெவில்' படத்தை அவரே தயாரிப்பது இதனால் தான்!
திரைப்பட விளம்பர நிகழ்ச்சிகளில் முன்னணி நடிகர்கள் பங்கேற்காமல் தவிர்ப்பதையும், நடிகர் அஜித்தின் அதிக சம்பளக் கோரிக்கையையும் விமர்சித்து பிரபல சினிமா விநியோகஸ்தரும் பைனான்சியருமான திருப்பூர் சுப்பிரமணியம் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
நடிகர் அஜித் குமார் தனது முந்தைய படத்திற்கு வாங்கிய அதே சம்பளத்தைப் பெற ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்ததாகவும், எந்தத் தயாரிப்பாளரும் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை என்றும் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சினிமா சந்தை நிலவரப்படி விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் கேட்கும் சம்பளத்தைக் கொடுத்து படம் எடுப்பது கடினம். சம்பளத்தைக் குறைக்காத நிலையில், சொந்தமாகப் படம் தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள 'டேர்டெவில்' திரைப்படத்தை, அவரது மனைவி ஷாலினி தனது 'பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்' பேனரில் தயாரிப்பதே இதனால்தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அஜித் பட விளம்பரங்களுக்கு வருவதில்லை, ஆனால் பைக் ரேஸ் மற்றும் வணிக விளம்பரங்களில் நடிக்கிறார். அதேபோல் நடிகை நயன்தாராவும் தனது சொந்தப் படங்களுக்கு மட்டுமே விளம்பரம் செய்கிறார் என சுப்பிரமணியம் சாடியுள்ளார்.
இந்தி, தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் உலகளாவிய நடிகர்கள் அனைவரும் தங்கள் படங்களின் விளம்பரங்களில் பங்கேற்கும் போது, தமிழ்நாட்டில் மட்டும் இந்த நிலை நீடிப்பது தவறானது.
கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் போடும்போதே நடிகர்கள் விளம்பரத்திற்கு வர வேண்டும் என்பதை நிபந்தனையாக்க வேண்டும். விளம்பரத்திற்கு வர மறுக்கும் நடிகர்களுடன் படம் தயாரிக்க மாட்டோம் எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
