40 நாட்களாகியும் நெல் கொள்முதல் இல்லை? தேசிய நெடுஞ்சாலையை முடக்கி விவசாயிகள் போராட்டம்!
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் நெல் கொள்முதலில் நிலவும் அலட்சியத்தைக் கண்டித்து, வெங்கடயப்பள்ளி மற்றும் மங்கப்பேட்டை பகுதிகளில் விவசாயிகள் இன்று (மே 7) தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 40 நாட்களாகத் தானியங்கள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடப்பதாகக் குற்றம் சாட்டி, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், அறுவடை செய்யப்பட்டு 40 நாட்களுக்கு மேலாகியும் அரசு கொள்முதல் நிலையங்கள் நெல்லைப் பெற்றுக்கொள்ளவில்லை. கொள்முதல் நிலையங்களில் முறையான தார்ப்பாய்கள், குடிநீர் வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லை. ஈரப்பதம் மற்றும் தரம் என்ற பெயரில், நெல்லின் மதிப்பைக் குறைத்துக் காட்டி அதிகாரிகள் மோசடி செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் (Tahsildar), விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கொள்முதல் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டனர்.
