“சட்டமன்றத்திற்கு வெளியே முன்அனுமதி தேவையில்லை”... திமுக மார்க்கண்டேயன் கைது நடவடிக்கைக்கு சபாநாயகர் விளக்கம்

 
மார்க்கண்டேயன்

விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளுக்குத் தமிழ்நாடு சட்டப்பேரவைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெளிவான விளக்கமளித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்வதற்கு முன்பாகச் சபாநாயகரின் அனுமதி பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர்,  சட்டமன்ற வளாகம் அல்லது பேரவையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்குள் வைத்து ஒரு எம்.எல்.ஏ-வைக் கைது செய்ய மட்டுமே சபாநாயகரின் முன்அனுமதி பெற வேண்டும். சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே நடைபெறும் விவகாரங்களில் ஓர் உறுப்பினரைக் கைது செய்யக் காவல்துறையினர் சபாநாயகரிடம் முன்அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், கைது செய்த தகவலைச் சபாநாயகருக்குத் தெரிவிக்க வேண்டும்.

விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்

மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டது குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உடனடியாகத் தமக்குத் தகவல் தெரிவித்து விட்டதாகச் சபாநாயகர் உறுதிபடுத்தினார். எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் பேச்சு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட சபாநாயகர், ஊடகச் செய்திகளின் அடிப்படையில் மட்டுமே தம்மால் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது எனக் கூறினார்.

திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்

பாதிக்கப்பட்ட தரப்பினரோ அல்லது பேரவை உறுப்பினர்களோ இது குறித்துத் தன்னிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கும் பட்சத்தில், சட்டமன்ற விதிகளின்படி உரிய விசாரணை நடத்தப்பட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.