நடிகர் சங்க பதவிக்கால நீட்டிப்புக்கு தடையில்லை - உயர் நீதிமன்றம்!

 
நடிகர் சங்கம்

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட பொதுக்குழுத் தீர்மானத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை, ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடிகர் நாசர் தலைவராகவும், நடிகர் விஷால் பொதுச்செயலாளராகவும், நடிகர் கார்த்தி பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களது 3 ஆண்டுகாலப் பதவிக்காலம் கடந்த 2025 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது.

முன்னதாக கடந்த 2024 செப்டம்பர் 8 அன்று நடைபெற்ற சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் சங்கத்தின் புதிய கட்டட கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதால், தேர்தல் நடத்தினால் பணிகள் பாதிக்கப்படும் எனக் கூறி நிர்வாகிகளின் பதவிக்காலம் 2028 வரை நீட்டிக்கப்படுவதாக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடிகர் சங்கம்

இந்தத் தீர்மானம் சங்கத்தின் விதிமுறைகளுக்கும், தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்திற்கும் எதிரானது எனக் கூறி, நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான வி. நம்பிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை அதிகாரியாக நியமித்து உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதற்கிடையில், இந்த சிவில் வழக்கை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும், இதனை ஆரம்பத்திலேயே நிராகரிக்க வேண்டும் என்றும் கோரி நடிகர் சங்கத்தின் மற்றொரு உறுப்பினரான எஸ்.ஆர்.சேகர் தரப்பில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

நடிகர் சங்கம்

இந்த மனுவை விரிவாக விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி. மரியா கிளேட், எஸ்.ஆர்.சேகரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நடிகர் சங்கத் தரப்பில் தமிழக அரசின் அரசாணை மற்றும் சங்கப் பொதுக்குழுவின் உச்சபட்ச அதிகாரம் குறித்துப் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், நம்பிராஜன் தொடர்ந்துள்ள முதன்மை வழக்கை முழுமையாக விசாரித்துத் தான் தீர்ப்பு வழங்க முடியும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் காரணமாக, உறுப்பினர் நம்பிராஜன் தொடர்ந்த வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து விசாரிக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில், நீதிமன்றம் தற்போதைய நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கோ அல்லது பதவிக்கால நீட்டிப்புக்கோ எந்தவித இடைக்காலத் தடையும் விதிக்காததால், நாசர் மற்றும் விஷால் தலைமையிலான தற்போதைய நிர்வாகக் குழுவினர் தங்களது பணிகளைத் தடங்கலின்றித் தொடரும் நிலை நீடிக்கிறது.