ஆதார் பயோமெட்ரிக் இல்லைன்னா மானிய விலையில் சிலிண்டர் கிடையாது - எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை!
மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தகுதியான நுகர்வோரை மட்டுமே சென்றடைவதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தைக் கட்டாயமாக்கியுள்ளது. இது குறித்த இறுதி எச்சரிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது வெளியிட்டுள்ளன.
வீட்டு உபயோக கியாஸ் நுகர்வோருக்கான பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் செய்யும் பணிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது குறித்த விழிப்புணர்வுகளை எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருவதோடு, சிறப்பு முகாம்களையும் நடத்தி வந்துள்ளன.

பொதுமக்களின் வசதிக்காகக் காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டதன் பயனாக, கடந்த 19-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 27.43 கோடி வீட்டு உபயோக நுகர்வோர்களில் சுமார் 89.9 சதவீதம் பேர் அதாவது பெரும்பான்மையினர் தங்களது பயோமெட்ரிக் அங்கீகாரப் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
இதற்கிடையே, இன்னும் சுமார் 10 சதவீத நுகர்வோர் மட்டுமே இந்தச் சரிபார்ப்பை முடிக்க வேண்டியுள்ளது. இவர்களுக்காக அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 1-ஆம் தேதி வரை மட்டுமே இறுதி கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வருகிற அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் தங்களது பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடிக்காத நுகர்வாளர்களுக்கு மானிய விலையிலான சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படாது என்று மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. எனவே, விடுபட்டுள்ள நுகர்வோர் உடனடியாக இந்தச் சரிபார்ப்பை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
