“மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை” - செந்தில் பாலாஜி ‘தில்’ பேட்டி!
கரூர் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, "மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை" என்றும், தன் மீது சுமத்தப்படும் வழக்குகளையும் சோதனைகளையும் தைரியமாகச் சந்திக்கத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் தொடர்பான வழக்கின் நிபந்தனை ஜாமீனில் தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வரும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிந்த பிறகு பேசிய செந்தில் பாலாஜி, "எனது அறையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். சோதனையின் முடிவில் என்னிடமிருந்து எவ்வித ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறையினர் என்னிடம் கையெழுத்துப் பெற்றுச் சென்றுள்ளனர்" என்று கூறினார்.

டாஸ்மாக் தொடர்பான வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் மேலும் ஒரு வழக்கை அரசு பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
"மூத்த அமைச்சர்கள் மீது பொய்ப் புகார்களைப் பெறுவதிலேயே இந்த அரசு முனைப்பாக உள்ளது. சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி இதன் மீதான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை எடுப்பேன்" என்றார்.
"மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. எந்த வழக்காக இருந்தாலும், எப்படிப்பட்ட சோதனையாக இருந்தாலும் அதனைச் சட்டப்பூர்வமாகத் தைரியமாகச் சந்திப்போம்" என அவர் தனது பேட்டியில் உறுதியளித்தார்.
