மோடி பெயரில் நொய்டா விமான நிலையம்! பெயர் மாற்ற முன்மொழிவுக்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் பெயரை மாற்றுவதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, விமான நிலையத்துக்கு “நரேந்திர மோடி சர்வதேச விமான நிலையம், நொய்டா–ஜேவர்” எனப் பெயரிட முன்மொழியப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோவில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடி மாநிலத்துக்கு வழங்கிய முக்கியத் திட்டமாக இந்த விமான நிலையம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பெயர் மாற்ற முன்மொழிவு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால அரசுத் தலைமைப் பணியைப் பாராட்டும் தீர்மானத்தையும் மாநில அமைச்சரவை நிறைவேற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2001-ம் ஆண்டு குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் அரசுத் தலைமைப் பொறுப்பில் அவர் தொடர்ந்து பணியாற்றிய காலத்தைச் சிறப்பிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜேவர் பகுதியில் அமைந்துள்ள இந்த விமான நிலையம், தேசிய தலைநகர் பிராந்தியத்தின் முக்கியமான விமானப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தின் மிகப்பெரிய விமான நிலையமாகவும், எதிர்காலத்தில் நாட்டின் முக்கிய விமானப் போக்குவரத்து மையமாகவும் இது திகழும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த விமான நிலையத்தின் முதல் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2026 மார்ச் 28-ஆம் தேதி திறந்து வைத்தார். பெயர் மாற்ற முன்மொழிவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பெயர் மாற்றம் நடைமுறைக்கு வருவதற்கான அடுத்தகட்ட அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளும் கவனிக்கப்படுகின்றன.
