பிள்ளைகள் யாருமே கவனிக்கல... இறுதிச்சடங்கிற்கு பொருட்களை வீட்டில் வாங்கி வைத்துவிட்டு தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை!

 
கடலூர் கடலூர்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த சின்னபுங்கனேரி கிராமத்தில் ஒட்டுமொத்த பொதுமக்களையும் உறையவைக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சிகரமான விபரீதச் சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 57 வயது விவசாயி ராவணன் மற்றும் அவரது 50 வயது மனைவி சித்ரா ஆகிய இருவரும் கடந்த ஓராண்டாகக் கடுமையான உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தும் ஒருவர் வெளிநாட்டிலும், மற்றொருவர் வெளியூரிலும் குடும்பத்துடன் தங்கிவிட்டதால், இவர்களை உடனிருந்து கவனிக்க யாரும் இல்லாத நிலை இருந்துள்ளது.

ஆம்புலன்ஸ்

தங்களைக் கவனிக்க ஆள் இல்லாததாலும், யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்று கருதியதாலும் இந்த வயதான தம்பதியினர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்தமாக விரக்தியடைந்த ராவணன் மற்றும் சித்ரா ஆகிய இருவரும், நேற்று மாலை தங்களது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வேப்ப மரத்தில் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்டுமன்னார்கோவில் காவல்துறையினர், தம்பதியரின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து அவர்களின் வீட்டிற்குள் சென்று தீவிரச் சோதனை நடத்தியபோது அங்கு ஒரு நெஞ்சை உருக்கும் காட்சி தென்பட்டது. அந்தத் தம்பதியினர் தங்களின் மரணத்திற்குப் பிறகு யாருக்கும் சிரமம் தரக்கூடாது என்பதற்காக, தங்களின் இறுதிச்சடங்கிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் முன்கூட்டியே கடைக்குச் சென்று முறைப்படி வாங்கி வீட்டிற்குள் தயார் நிலையில் வைத்திருந்தது தெரியவந்தது. பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால் முதிய தம்பதி இறுதிச்சடங்கு பொருட்களை வாங்கி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.