ரூ.200 கோடி மோசடி வழக்கு: நடிகை நோரா பதேகிக்கு நீதிமன்றம் சம்மன்!
சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய ரூ.200 கோடி பண மோசடி வழக்கில், பாலிவுட் நடிகை நோரா பதேகி சாட்சியாக ஆஜராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
சிறையில் இருந்தபடியே ஆள்மாறாட்டம் செய்து, தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் கோடிக்கணக்கில் பணம் பறித்ததாக சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சுகேஷின் மனைவி லீனா மரியா பால் மூலமாகவே தனக்கும் சுகேஷுக்கும் அறிமுகம் ஏற்பட்டதாக நோரா பதேகி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்தப் பின்னணியில், வழக்கு விசாரணைக்காக அவரை நீதிமன்றம் சாட்சியாக அழைத்துள்ளது.
அதன்படி, வரும் நவம்பர் 2-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க நோரா பதேகிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த வழக்கில் நோரா பதேகி குற்றம் சாட்டப்பட்டவராக அல்லாமல் சாட்சியாகவே அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
