வடகொரியா ஏவுகணை சோதனை... ஜப்பான் அருகே விழுந்ததால் பரபரப்பு - உலக நாடுகள் அதிர்ச்சி!
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா இன்று காலை மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தி சர்வதேச அரங்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இன்று (ஏப். 19) அதிகாலை 6 மணியளவில் வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து பல்வேறு பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஏவி அதிரடி சோதனை நடத்தியது. இந்த ஏவுகணைகள் சீறிப்பாய்ந்து சென்று ஜப்பானின் கடல் எல்லைக்கு மிக அருகில் விழுந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சோதனை குறித்துப் பேசிய ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, "ஏவுகணைகள் ஜப்பானின் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்திருக்கக்கூடும் என நம்புகிறோம். இருப்பினும், இந்தச் செயல் பிராந்திய பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகும்" என்று தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் இந்தத் திடீர் நடவடிக்கையைத் தொடர்ந்து ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து ஏவுகணைகளின் வகை மற்றும் அதன் தாக்கம் குறித்துத் தீவிர ஆய்வு செய்து வருகின்றன. வடகொரியாவின் இந்தச் செயல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறுவதாக உள்ளதாகக் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஏற்கனவே உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், கிழக்கு ஆசியாவிலும் வடகொரியா இத்தகைய சோதனைகளை நடத்தி வருவது உலக நாடுகளைக் கவலையடையச் செய்துள்ளது.
