வடகொரியா மீண்டும் சோதனை... ஜப்பான் கடலை நோக்கி பல ஏவுகணைகளை ஏவி அட்டூழியம்!
அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய முப்படை கூட்டு ராணுவப் பயிற்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வடகொரியா தனது கிழக்கு கடல் பகுதியை நோக்கி பல குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தீவிர சோதனை நடத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் 'ஃப்ரீடம் எட்ஜ்' எனப்படும் 5 நாள் கூட்டுப் பயிற்சியை வடகொரியா தனது இறையாண்மைக்கு எதிரான ஆக்கிரமிப்பு பயிற்சியாக கருதுகிறது. இந்த பயிற்சி முடிவடைந்த சில மணி நேரங்களிலேயே வடகொரியா இந்த ஏவுகணைத் தாக்குதல் சோதனையைச் செய்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

வடகொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான வொன்சான் பகுதியில் இருந்து பல ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அவை ஒவ்வொன்றும் சுமார் 250 கிலோமீட்டர் தூரம் பயணித்து நாட்டின் கிழக்குக் கடல் பகுதியில் விழுந்ததாகவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் இந்தத் தொடர் ஏவுகணைச் சோதனைகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைகளை மீறுவதாக உள்ளதாகத் தென்கொரியாவின் தேசியப் பாதுகாப்புச் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. அதேசமயம், இந்தச் சோதனை அமெரிக்காவுக்கோ அல்லது அதன் கூட்டாளிகளுக்கோ உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடுமையான எச்சரிக்கை: தங்களது நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எதிரி நாடுகள் செயற்பட்டால், வலிமையின் அடிப்படையில் கடுமையான மற்றும் சக்திவாய்ந்த பதிலடிகள் கொடுக்கப்படும் என வடகொரிய தரப்பு தொடர்ந்து எச்சரித்து வருவதால் கொரிய தீபகற்பப் பகுதியில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
