வடகொரிய அதிபர் கிம் ஜாங் மரண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி - புதிய புகைப்படங்களை வெளியிட்டு அதிரடி காட்டியது வடகொரியா!
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மருத்துவ அவசரநிலை காரணமாக உயிரிழந்துவிட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அவர் நலமுடன் இருக்கும் புதிய புகைப்படங்களை வடகொரிய அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கிளப்பிய மரண வதந்தி, உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சில மணி நேரங்களிலேயே வடகொரியா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
42 வயதான அதிபர் கிம் ஜாங் உன், திங்கட்கிழமை அன்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள் மற்றும் காலணிகள் தயாரிப்பு கண்காட்சியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அங்குள்ள தயாரிப்புகளை அவர் கையில் எடுத்துப் பரிசோதிப்பதும், அதிகாரிகளுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்குவது போன்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும், இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்ட சரியான தேதி மற்றும் அதன் உண்மைத்தன்மை குறித்துச் சர்வதேச ஊடகங்களால் இன்னும் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை.
அமெரிக்காவில் வசித்து வரும் சீன ஜனநாயகக் கட்சியின் அதிருப்தியாளரான வான்ஜூன் ஷி என்பவர், ஞாயிற்றுக்கிழமை அன்று 'X' தளத்தில் வெளியிட்ட பதிவுகளே இந்த வதந்திகளுக்குக் காரணமாக அமைந்தன. அவர் தனது பதிவில், "கிம் ஜாங் உன்னுக்கு மூளையில் கடுமையான ரத்த கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை நிபுணர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்" எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இதற்கான எந்தவொரு மருத்துவ ஆதாரங்களையோ அல்லது சான்றுகளையோ அவர் சமர்ப்பிக்கவில்லை. இந்தச் செய்தி உலக ஊடகங்களில் பரவியதால், அவருக்குப் பிறகு அவரது தங்கை கிம் யோ ஜாங் நாட்டின் புதிய அதிபராகப் பொறுப்பேற்பாரா என்ற ஊகங்களும் எழத் தொடங்கின.

வடகொரிய அதிபரின் உடல்நிலை குறித்துத் தென்கொரியாவின் தேசிய உளவு அமைப்பு கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வெளியிட்ட அறிக்கையின்படி, கிம் ஜாங் உன் சுமார் 140 கிலோ எடை கொண்டுள்ளதாகவும், உடல் பருமன் காரணமாக அவருக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவருக்குப் பெரிய அளவிலான மருத்துவப் பாதிப்புகள் எதுவும் இல்லை என்றும், 2011-ம் ஆண்டு முதல் வடகொரியாவின் அதிபராகப் பதவியில் இருக்கும் அவர் தொடர்ந்து பல்வேறு பணிகளைக் கவனித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
