தமிழகத்தில் அக்.15-21ல் வடகிழக்கு பருவமழை தொடக்கம்! IMD தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் உருவாகி வரும் நிலையில், இந்த ஆண்டு பருவமழை எப்படி இருக்கும் என்பது குறித்த கணிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.அதன்படி, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.15 முதல் 21-ம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான பருவத்தில் தென் தீபகற்ப இந்தியாவில் மழைப்பொழிவு இயல்பான அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தென் மாவட்டங்கள் மற்றும் தென்மேற்கு பகுதிகள், அவற்றை ஒட்டிய கடலோர பகுதிகளில் இயல்பானது முதல் இயல்பைவிட அதிகமான மழைப்பொழிவு கிடைக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழைப்பொழிவு மாறுபடக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்தைப் பொறுத்தவரை, தமிழகத்தின் சில பகுதிகளில் இயல்பைவிட அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மற்ற சில பகுதிகளில் இயல்பைவிட குறைவான மழை பதிவாகலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இயல்பான மழைப்பொழிவு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் சமீபத்திய கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, பசிபிக் பெருங்கடலில் வலுவான எல் நினோ சூழல் நிலவி வருகிறது. இந்த எல் நினோ தாக்கம் ஆண்டு இறுதி வரை தொடரும் என கணிக்கப்பட்டாலும், கடந்த சில ஆண்டுகளின் தரவுகளின்படி எல் நினோ மற்றும் தமிழகத்தின் வடகிழக்கு பருவமழைக்கு இடையிலான தொடர்பு ஒரே மாதிரியாக இருப்பதில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் இருமுனை நிலை (IOD) தற்போது நடுநிலையில் உள்ளது. எனவே, எல் நினோ மற்றும் IOD உள்ளிட்ட பல்வேறு கடல்-வளிமண்டல காரணிகளைக் கருத்தில் கொண்டே பருவமழையின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் ஆண்டு மழைப்பொழிவில் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் மாவட்ட வாரியான வானிலை முன்னறிவிப்புகள் பொதுமக்களுக்கு மேலும் தெளிவான தகவல்களை வழங்கும்.
