வடகிழக்கு பருவமழை தீவிரம்... விவசாயிகளுக்குக் கட்டுப்பாட்டு அறை, வாட்ஸ்அப் அலர்ட் அறிவிப்பு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாயிகளின் நலனையும் அவர்களின் கடின உழைப்பால் விளைந்த பயிர்களையும் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கிமான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வேளாண்மை உற்பத்தி ஆணையர் தலைமையில் உயர் மட்டக் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், விவசாயிகளுக்குத் தினசரி வானிலை ஆலோசனைகள் வழங்குவது, பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளைப் பதிவு செய்தல், தேவையான உரங்கள் மற்றும் விதைகளைப் போதுமான அளவில் இருப்பு வைத்தல் உள்ளிட்ட 6 மிக முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், வடகிழக்கு பருவமழைக் கால பாதிப்புகளைச் சமாளிக்க மாவட்ட அளவில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறைகளை அமைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குத் தேவையான வானிலை நிலவரங்கள் மற்றும் அது சார்ந்த பயிர் பாதுகாப்பு ஆலோசனைகளை ‘உழவர் செயலி’ மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத் தினசரி அடிப்படையில் உடனுக்குடன் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பயிர்களுக்குப் பெரிய அளவில் சேதம் ஏற்படாமல் இருக்க, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பிரத்யேகமாகத் தயாரித்துள்ள மாற்றுப் பயிர் திட்டத்தை உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.
வடகிழக்கு பருவமழை காலச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், விவசாயிகளுக்குத் தேவையான தரமான சான்றளிக்கப்பட்ட விதைகள், அவசியமான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தடையின்றி வழங்கும் பொருட்டுப் போதுமான அளவில் இருப்பு வைக்க வேண்டும்.
மாநிலம், மாவட்டம் மற்றும் வட்டாரம் என மூன்று வெவ்வேறு நிலைகளிலும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அவசரகாலக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் வயல்களில் ஏற்படும் பயிர் சேத விவரங்களை உடனுக்குடன் சேகரித்து அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

கனமழையின் காரணமாக விவசாய நிலங்கள் மற்றும் வயல்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டால், உடனடியாகத் தற்காலிக வடிகால் வசதிகளை ஏற்படுத்தித் தண்ணீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும். அத்துடன் வயல் வரப்புகளைப் பாதுகாக்கத் தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சம்பா பருவத்தில் இயற்கைப் பேரிடர்கள் மற்றும் எதிர்பாராத பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் திறம்படச் சமாளிக்க, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளை முழுமையாகப் பதிவு செய்ய ஊக்கப்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
