“ஹார்மூஸ் ஜலசந்தியை அல்ல; ஈரான் துறைமுகங்களைத் தான் முற்றுகையிட்டுள்ளோம்!” - அமெரிக்கா விளக்கம்!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. ஈரானின் கடல் பகுதியை அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சுற்றி வளைத்துள்ள நிலையில், உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ‘ஹார்மூஸ் ஜலசந்தி’ முடக்கப்பட்டுள்ளதா என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்தது. இதற்கு அமெரிக்க விமானப் படையின் ஜெனரல் டேன் கெய்ன் தற்போது தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 21 மணி நேரம் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளை இருபுறமும் தனது கப்பற்படை மூலம் முற்றுகையிட்டுள்ளது. இது குறித்துப் பேசிய ஜெனரல் டேன் கெய்ன், “நாங்கள் சர்வதேச நீர்வழியான ஹார்மூஸ் ஜலசந்தியைத் தடை செய்யவில்லை. ஈரானின் பிராந்தியத்திற்கு உட்பட்ட கடற்பரப்பு மற்றும் அதன் துறைமுகங்களை மட்டுமே முற்றுகையிட்டுள்ளோம்” என்று கூறினார்.

இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம், ஈரானின் துறைமுகங்களுக்கு வரும் அல்லது அங்கிருந்து வெளியேறும் அனைத்துக் கப்பல்களும் தடுத்து நிறுத்தப்படும். இதற்கு எந்த நாடும் விதிவிலக்கல்ல என்றும் அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் பிற நாடுகளின் வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதிப்பு இல்லை என்று அமெரிக்கா கூறினாலும், ஈரானின் பொருளாதாரத்தை முழுமையாக முடக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த ‘துறைமுக முற்றுகை’ (Port Blockade) பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
