இனி 'சில்' மோட் தான்.. இன்று குடும்பத்துடன் கொடைக்கானலுக்குப் பறக்கும் முதல்வர் ஸ்டாலின் - ஒரு வார கால ஓய்வு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் கடந்த ஒரு மாத காலமாகத் தகித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்தத் தேர்தலில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 85.15 சதவீத வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகத் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்த தி.மு.க. தலைவர் மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு மாத கால ஓய்வற்ற உழைப்பிற்குப் பிறகு தற்போது ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடவும், உடல் சோர்வைப் போக்கவும் அவர் மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் முதல்வர், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாகப் பசுமை போர்த்திய கொடைக்கானலைச் சென்றடைகிறார். அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி, சுமார் ஒரு வார காலம் அவர் முழுமையான ஓய்வில் இருக்கப் போகிறார்.

முதல்வரின் வருகையை முன்னிட்டு கொடைக்கானலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வத்தலக்குண்டு முதல் கொடைக்கானல் வரை முக்கியமான இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, தீவிரக் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேர்தலுக்குப் பிறகு அரசு முறைப் பயணங்கள் ஏதுமின்றி, தனிப்பட்ட முறையில் ஒரு வார காலம் முதல்வர் ஓய்வெடுப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. ஓய்வு முடிந்து சென்னை திரும்பியதும், தேர்தல் முடிவுகள் மற்றும் அடுத்தகட்ட ஆட்சிப் பணிகள் குறித்த ஆலோசனைகளில் அவர் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
