இனி நகைகளை வைத்து ரூ.4 லட்சம் கடன் பெறலாம்... அமலுக்கு வந்த ஆர்பிஐ புது உத்தரவு!

 
நகைக்கடன், ரிசர்வ் வங்கி நகைக்கடன், ரிசர்வ் வங்கி

பொதுமக்கள் தங்களது அவசரத் தேவைகளுக்காகத் தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெறுவதில் நிலவி வந்த கட்டுப்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாகத் தளர்த்தியுள்ளது. ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்தப் புதிய விதிகளின்படி, சிறிய மற்றும் நடுத்தரக் கடன் வாங்குபவர்கள் இனி தங்களது நகையின் மதிப்பில் அதிகப்படியான தொகையைக் கடனாகப் பெற முடியும்.

புதிய அடுக்குமுறை (Tiered LTV) என்றால் என்ன?

இதுவரை நகையின் மதிப்பில் 75% வரை மட்டுமே கடன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இனி கடன்தொகைக்கு ஏற்ப இந்த வரம்பு மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக உங்கள் வசம் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்கம் இருந்தால், பழைய விதிப்படி ரூ. 3.75 லட்சம் மட்டுமே கடன் கிடைத்திருக்கும். ஆனால், இனி 80% விகிதப்படி உங்களுக்கு ரூ. 4 லட்சம் வரை கடன் கிடைக்கும்.

நகைக்கடன் தங்கம்

தங்க விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அதன் மதிப்பை நிர்ணயிப்பதிலும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது:

கடந்த 30 நாட்களின் சராசரி முடிவு விலை அல்லது முந்தைய நாளின் முடிவு விலை, இதில் எது குறைவாக உள்ளதோ அதன் அடிப்படையிலேயே உங்கள் நகையின் மதிப்பு கணக்கிடப்படும். இதன் மூலம் திடீர் விலை சரிவினால் கடன் பெறுபவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறையும்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 22 கேரட் தங்கத்தை மட்டுமே மதிப்பீட்டிற்கான தரநிலையாக (Benchmark) பயன்படுத்த வேண்டும்.

நகைக்கடன் தங்கம்

கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்திய 7 வேலை நாட்களுக்குள், அடகு வைக்கப்பட்ட நகைகளை வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆர்பிஐ கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. நகையில் உள்ள கற்கள் அல்லது மணிகளின் எடை கழிக்கப்பட்டு, தங்கத்தின் 'உள் மதிப்பு' மட்டுமே கடனுக்குக் கணக்கில் கொள்ளப்படும்.

விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் ரூ. 2.5 லட்சம் வரை கடன் பெறும்போது 85% வரை பணம் கிடைப்பது அவர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். மேலும், ரூ. 2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு வருமானச் சான்றிதழ் போன்ற கட்டாய நடைமுறைகளும் தளர்த்தப்பட்டுள்ளன.