யுஜிசி நெட், சிஎஸ்ஐஆர் நெட், ஜேஇஇ மெயின் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையை வெளியிட்டது NTA
தேசியத் தேர்வுகள் முகமை, வரும் டிசம்பர் 2026 முதல் 2027 ஏப்ரல் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நடைபெறவுள்ள பல்வேறு முக்கியமான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட புதிய கால அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை ஆகியவற்றுக்கான டிசம்பர் பருவ யுஜிசி நெட் தேர்வுகள் 2026 டிசம்பர் 14 முதல் 18 ஆம் தேதி வரையிலும், மற்றும் டிசம்பர் 21 ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான கூட்டுச் சிஎஸ்ஐஆர்-யுஜிசி நெட் தேர்வு 2026 டிசம்பர் 19, 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ மெயின் முதல் அமர்வு தேர்வு 2027 ஜனவரி 20 முதல் 24 ஆம் தேதி வரையிலும், ஜனவரி 28 ஆம் தேதியும் நடைபெறும். இதனைத் தொடர்ந்து இரண்டாம் அமர்வு தேர்வுகள் 2027 ஏப்ரல் 2 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறும் என NTA உறுதி செய்துள்ளது.

மாணவர்கள் மற்றும் தேர்வர்கள் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவுத் தேதிகள், அனுமதிச் சீட்டு மற்றும் தேர்வு மைய விவரங்களை அறியத் தேசியத் தேர்வுகள் முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான nta.ac.in மற்றும் jeemain.nta.nic.in ஆகியவற்றைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நிர்வாக மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் தேவைப்படின் அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
