நர்ஸ் தற்கொலையில் திடீர் திருப்பம்... 4 பேர் கைது - 14 பேர் மீது வழக்குப்பதிவு!
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே, கழிவுநீர் பிரச்சினை காரணமாக பக்கத்து வீட்டுக்காரர்களால் ஏற்பட்ட மன உளைச்சலில் நர்ஸ் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அய்யம்பாளையம் ராமலிங்கம் நகரைச் சேர்ந்தவர் வினிதா (32). நர்ஸாகப் பணியாற்றி வந்த இவருக்கும், இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜபாண்டி தரப்பினருக்கும் இடையே கழிவுநீர் வெளியேறுவது தொடர்பாக நீண்ட நாட்களாகப் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று இது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜபாண்டி தரப்பினர் வினிதாவை மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு, அவருக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பொது இடத்தில் வைத்து ஆபாசமாகத் திட்டியதால் மிகுந்த மனவேதனையடைந்த வினிதா, வீட்டில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தத் தற்கொலை குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். வினிதாவைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ராஜபாண்டி உள்ளிட்ட மொத்தம் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் தொடர்புடைய வெற்றி, பெருமாள், முருகன், மற்றும் பிரியா ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 14 பேரையும் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
அண்டை வீட்டாருடன் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளைக் கலந்து பேசித் தீர்க்காமல், ஒரு உயிரைப் பறிக்கும் அளவிற்குச் சென்றது அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
