கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொன்று புதைத்த நர்ஸ்!
தெலங்கானா மாநிலத்தில் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து செவிலியர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்து உடலை ரகசியமாகப் புதைத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் கங்காபூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்தியம் ரெட்டி. இவருடைய மனைவி கல்பனா. இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கல்பனா நாராயன்கேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக (Nurse) பணியாற்றி வந்துள்ளார். அப்போது, அங்குள்ள சிண்டு என்பவருடன் கல்பனாவிற்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்கள் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

கல்பனா மற்றும் சிண்டுவின் கள்ளக்காதல் விவகாரம் கணவர் முத்தியம் ரெட்டிக்குத் தெரியவந்ததை அடுத்து, அவர் தனது மனைவியைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். தங்களின் கள்ளக்காதலுக்கு முத்தியம் ரெட்டி தொடர்ந்து தடையாக இருப்பதை உணர்ந்த கல்பனாவும், அவரது கள்ளக்காதலன் சிண்டுவும் சேர்ந்து அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.
திட்டமிட்டபடி, கள்ளக்காதலன் சிண்டுவின் உதவியோடு தனது கணவன் முத்தியம் ரெட்டியைக் கல்பனா கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். பின்னர், யாருக்கும் சந்தேகம் வராதவாறு அவரது உடலை ரகசியமாக ஒரு இடத்தில் குழிதோண்டிப் புதைத்துள்ளனர்.

முத்தியம் ரெட்டி திடீரென காணாமல் போனது குறித்து எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், போலீசார் கல்பனாவிடம் தங்களின் பாணியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கல்பனா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்து புதைத்த உண்மையை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, முத்தியம் ரெட்டியின் உடலைத் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், கொலையாளிகளான செவிலியர் கல்பனா மற்றும் அவரது கள்ளக்காதலன் சிண்டு ஆகிய இருவரையும் தற்பொழுது அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
