கணவனுக்கு ஆசிட் ஊசி போட்டுக் கொன்ற நர்ஸ் மனைவி... கள்ளக்காதலால் வெறித்தனம்!

 
கள்ளக்காதல் கொலை

தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவனை, மொட்டை மாடியில் இருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்ய முயன்ற செவிலியர், அவர் உயிர் பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, ஆசிட்டை ஊசி மூலம் உடலில் செலுத்திப் படுகொலை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொலை தொடர்பாகச் செவிலியர் மற்றும் அவரது கள்ளக்காதலன் உட்பட 3 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி சந்தியா, ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு அனில் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் பிரசாந்திற்குத் தெரியவந்ததால், தம்பதியினரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. 

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் பிரசாந்தைத் தீர்த்துக்கட்ட சந்தியாவும், அவரது காதலன் அனிலும் தங்களது நண்பர் ஒருவருடன் கூட்டாகச் சதித் திட்டம் தீட்டினர். இதன்படி, முதலில் பிரசாந்தை வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து கீழே தள்ளிக் கொலை செய்ய முயன்றுள்ளனர். ஆனால், அந்த விபரீத முயற்சியில் கடுமையான காயங்களுடன் பிரசாந்த் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதல் முயற்சி தோல்வியடைந்த போதிலும், தங்களது கொலை வெறியைக் கைவிடாத சந்தியா, தான் ஒரு செவிலியர் என்பதால், மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பிரசாந்திற்கு, யாரும் இல்லாத நள்ளிரவு நேரத்தில் சந்தியா ஊசி போடுவது போல் நடித்துள்ளார். ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்கையில், அதன் வழியாக வீரியமிக்க ஆசிட்டை கணவனின் உடலில் வலுக்கட்டாயமாகச் செலுத்தியுள்ளார். இந்த இரசாயனம் உடலில் வேகமாகப் பரவியதன் காரணமாக, பிரசாந்த் கடுமையான உடல் வலியுடன் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரசாந்தின் திடீர் மரணத்தில் சந்தேகம் அடைந்த அவரது தாய், இதுகுறித்து காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார்.

கள்ளக்காதல்

புகாரின் பேரில், உடற்கூறாய்வு அறிக்கையில் உடலில் இரசாயனம்/ஆசிட் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, போலீசார் தங்களது பாணியில் நடத்திய தீவிர விசாரணையில் செவிலியர் சந்தியா, அவரது கள்ளக்காதலன் அனில் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த நண்பர் ஆகிய மூவரின் கொடூரச் சதி வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து, கொலையாளி சந்தியா உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிகள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கள்ளக்காதல் மோகத்தால் கணவனை ஆசிட் ஊசி செலுத்திக் கொடூரமாகக் கொன்ற இச்சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.