நர்ஸ் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் சூப்பர்வைசர் கைது: உஸ்மானியா மருத்துவமனையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!
தெலுங்கானா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை முயற்சியை எதிர்த்த 21 வயது செவிலியர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மருத்துவமனை சூப்பர்வைசர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தைக் கண்டித்து மருத்துவமனை வளாகத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் துக்குகுடா நகரில், 21 வயதுடைய நர்ஸ் ஒருவர் தங்கியிருந்த அறையில் பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு ஆளாகியுள்ளார். அதனை அவர் கடுமையாக எதிர்த்துப் போராடியபோது, சூப்பர்வைசர் சாய்னா உல்லா என்பவரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நர்ஸ் தனது அறையில் சடலமாகக் கிடப்பதை மருத்துவமனை ஊழியர் ஒருவர் கண்டறிந்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். இக்கொலைத் தொடர்பாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சூப்பர்வைசர் சாய்னா உல்லா, தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
இக்கொடூரச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட செவிலியருக்கு நீதி கேட்டும் உஸ்மானியா மருத்துவமனை முன்பு பாஜகவினர் நேற்று தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
