சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் அதிரடி கைது!

 
செவிலியர்கள் நர்ஸ் போராட்டம்

பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, முன் அனுமதிப் பெற்று சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 4,000-க்கும் மேற்பட்ட செவிலியர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கம் சார்பில், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து செவிலியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

செவிலியர் போராட்டம்

முறையான காவல்துறையின் அனுமதி பெற்று 4,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நேற்று காலை முதல் எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில், முதலில் அந்தப் பகுதியில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இருப்பினும் செவிலியர்கள் சளைக்காமல் டார்ச் லைட் வெளிச்சத்தில் தமது போராட்டத்தைத் தொடர்ந்தனர். பின்னர், பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட செவிலியர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

நர்ஸ் செவிலியர்கள் போராட்டம்

இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, செவிலியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.