செமஸ்டரில் தோல்வி ... நர்சிங் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை... கதறித் துடிக்கும் பெற்றோர்!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கல்லூரித் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் நர்சிங் கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த 20 வயதான ஜீவன் என்ற மாணவரே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டவர் ஆவார். இந்த சோகமான சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் ஜீவன் ஈரோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் மருந்தகம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் வெளியான செமஸ்டர் தேர்வு முடிவுகளில் அவர் தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே யாரிடமும் சரியாகப் பேசாமல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திய ஜீவன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் போலீசார் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபரீத முடிவுக்குத் தேர்வுத் தோல்வி தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் குடும்பப் பிரச்சினைகள் உள்ளதா என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
