ஆபாச குறுஞ்செய்தி விவகாரம்.. அருள்விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு – யார் இந்த அருள்விக்னேஷ்?!
கள்ளக்குறிச்சி மாவட்டப் பெண் ஆட்சியருக்குத் தனது செல்போனிலிருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், தொந்தரவு அளித்ததாகவும் எழுந்த புகாரில், கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் (வயது 36) மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் எழுப்பிய கேள்விகள் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ஷக்னாஸ், நேற்று முன்தினம் மாலை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிடம் இருந்து எழுத்துப்பூர்வமாகப் புகார் பெறப்பட்டது.
ஆட்சியரின் புகார் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பி.என்.எஸ். பிரிவு 75 (1) (i) r/w 75 (2): விருப்பத்திற்கு மாறாகப் பாலியல் ரீதியான அணுகுமுறை மற்றும் அத்துமீறி நடந்து கொள்ளுதல் (அதிகபட்சம் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும்/அல்லது அபராதம்). பி.என்.எஸ். பிரிவு 75 (1) (iv) r/w 75 (3): பாலியல் நோக்கத்துடன் இரட்டை அர்த்தத்தில் பேசுதல் மற்றும் ஆபாசக் கருத்துகளைத் தெரிவித்தல் (அதிகபட்சம் ஓராண்டு சிறை மற்றும்/அல்லது அபராதம்).

பி.என்.எஸ். பிரிவு 78 (2): பெண்ணின் விருப்பமின்றித் தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்தல் (முதல் குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறை, மீண்டும் செய்தால் 5 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம்). பி.என்.எஸ். பிரிவு 132: அரசு ஊழியரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல் (அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை மற்றும்/அல்லது அபராதம்). தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச்சட்டம் பிரிவு 4: பெண்களைத் துன்புறுத்துதல் (அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை மற்றும் குறைந்தபட்சம் ரூ.10,000 அபராதம்).
வீட்டிற்குச் சென்ற தனிப்படை போலீசார்: வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் மற்றும் போலீசார் நேற்று காலை 10.30 மணியளவில் கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ. வீட்டிற்குச் சென்றனர். ஆனால், மாடி வீட்டில் உள்ள தனது அறையை உள்புறமாகப் பூட்டிக்கொண்ட எம்.எல்.ஏ. வெளியே வராததால், நீண்ட நேரக் காத்திருப்பிற்குப் பிறகு மதியம் 12 மணியளவில் போலீசார் அங்கிருந்து திரும்பினர்.
நேற்று மாலை 3.30 மணி முதல் இரவு 7 மணி வரை மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, கோட்டாட்சியர் முருகன், தாசில்தார் சேகர், 4 கிராம நிர்வாக அலுவலர்கள், ஆட்சியரின் உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களிடம் மாவட்ட எஸ்.பி. ஷக்னாஸ் 3 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினார். ஆபாச குறுஞ்செய்தி அனுப்ப எம்.எல்.ஏ. பயன்படுத்திய செல்போனைப் பறிமுதல் செய்து, அதனைச் சைபர் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி முழுமையான ஆதாரங்களைத் திரட்டவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையைச் சேர்ந்த சின்னையா – லட்சுமி தம்பதியரின் மகனான அருள்விக்னேஷ் (36), எம்.எஸ்சி. பட்டதாரி ஆவார். தச்சூரில் கிரிக்கெட் மைதானம் நடத்தி வந்த இவருக்கு, சிவசங்கரி என்ற மனைவியும், 3 வயதில் ரவீணாஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அருள்விக்னேஷிற்குக் கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் போட்டியிட்ட அவர், அதிமுக வேட்பாளர் ராஜீவ்காந்தியை 798 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று எம்.எல்.ஏ. ஆனார். முன்னதாக, தன் மீதான ஆபாச குறுஞ்செய்தி குற்றச்சாட்டுக்கு அருள்விக்னேஷ் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரைக் கைது செய்யப் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
