ஆபாச வீடியோக்களை மறைத்த விவகாரம்... ஜெம் கிரானைட் வீரமணியின் முன்னாள் உதவியாளர் கணேசனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

 
ஜெம் கிரானைட் வீரமணி

ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி சிறுமிகளுடன் அத்துமீறும் வீடியோ ஆதாரங்களை மறைத்து வைத்ததாகக் கைது செய்யப்பட்ட அவரது முன்னாள் உதவியாளர் கணேசனை, போக்சோ சிறப்பு நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, மகேந்திர சிம்மன் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

கிரானைட் வீரமணி

வீரமணியின் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தில் 23 ஆண்டுகளாக உதவியாளராகப் பணிபுரிந்து, தற்போது பாலாஜி குளோபல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் கணேசன் என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.

கணேசனின் செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் தொழிலதிபர் வீரமணி சிறுமிகளிடம் ஆபாசமாக இருக்கும் பல வீடியோக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அதிர்ச்சி தரும் வீடியோக்கள் குறித்துக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காமல் மறைத்து வைத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

வீரமணி

ஆபாச வீடியோக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கணேசனை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, கணேசனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட கணேசன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, வீரமணியிடமிருந்து சுமார் ரூ.70 கோடி வரை பணம் கைமாறி உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது புதிய வீடியோ ஆதாரங்களும் சிக்கியுள்ளதால் இவ்வழக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது.