கள்ளக்காதலுக்கு இடையூறு... 2 குழந்தைகளைக் கிணற்றில் வீசிக் கொன்ற கர்ப்பிணித் தாய், கள்ளக்காதலனுடன் கைது!

 
கள்ளக்காதல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பெத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரகாசம் என்பவரது விவசாயக் கிணற்றில் கடந்த 30ஆம் தேதி இரண்டு சிறுவர்களின் உடல்கள் மிதந்தன. இதுகுறித்துத் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்திலிருந்து ஆலங்காயம் காவல் நிலையத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கள்ளக்காதல்

விசாரணையில், வெளிச்சானூரைச் சேர்ந்த சிவகாமி (23) என்பவரது கணவர் சேட்டு ஆந்திராவில் செம்மரக் கடத்தல் வழக்கில் கைதாகிச் சிறையில் இருப்பது தெரியவந்துள்ளது. இவருக்கும், ஜமுனாமரத்தூர் அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜா (34) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, தற்போது சிவகாமி 3 மாத கர்ப்பமாக உள்ளார். ஏற்கனவே திருமணமாகி மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ள ராஜாவுடன் வாழ்வதற்கு, சிவகாமியின் மகன்களான பிரேம்குமார் (5) மற்றும் பிரதாப் (2) ஆகியோர் தடையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

கள்ளக்காதல்

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 27ஆம் தேதி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துச் சென்று விவசாயக் கிணற்றில் தூக்கி வீசிக் கொடூரமாகக் கொலை செய்ததை சிவகாமி ஒப்புக்கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் கர்ப்பிணித் தாயான சிவகாமி மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.