மருத்துவமனை வாசலில் பயங்கரம்! ஆம்புலன்ஸில் சிலிண்டர் வெடித்து நோயாளி பலி… 2 பேர் காயம்
ஒடிசா மாநிலத்தில் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில், சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நோயாளி உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் குந்தாபாய் கிராமத்தைச் சேர்ந்த சுஜோஷ் பரிக் (35), கடுமையான ரத்தத் தொற்று காரணமாக உதலா துணைப் பிரிவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இதற்காக தனியார் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. வியாழக்கிழமை இரவு சுமார் 8.45 மணியளவில் நோயாளி ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டார். அவருக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக ஓட்டுநர் சிலிண்டரின் வால்வைத் திறந்தபோது, வாயுக் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
தீ வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்தது. வெடிப்பின் தாக்கத்தில் ஆம்புலன்ஸின் மேற்கூரை பெயர்ந்து சுமார் 40 அடி தூரத்தில் விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயில் சிக்கிய சுஜோஷ் பரிக் பலத்த தீக்காயமடைந்து உயிரிழந்தார்.
அவரை மீட்க முயன்ற சரத் பிரதான், மாசி முண்டா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு உதலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மருத்துவமனை வளாகத்தில் நிகழ்ந்த இந்த விபத்தால் அங்கிருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக உதலா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆக்சிஜன் சிலிண்டரில் ஏற்பட்டதாகக் கூறப்படும் கசிவுக்கான காரணம் மற்றும் ஆம்புலன்ஸில் பின்பற்றப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
