விநாயகர் சிலை கரைப்பில் சோகம்! ஒடிசாவில் நீரில் மூழ்கி பலர் பலி!
ஒடிசாவில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், பல்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கிய சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் கஞ்சம், சுந்தர்கர், ஜெகத்சிங்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சோக சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. உயிரிழந்தவர்களில் சிறுவர்களும், இளைஞர்களும் இடம் பெற்றுள்ளனர்.
கஞ்சம் மாவட்டத்தில் விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கச் சென்ற இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஜெகத்சிங்பூர் மாவட்டம் எர்சாமா அருகே பிருத்தா ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற நான்கு இளைஞர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இதனிடையே, சுந்தர்கர் மாவட்டத்தில் கர்மா பூஜைக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது ஆற்றில் மூன்று சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனால் ஒடிசாவில் ஒரே நாளில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

பல இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வுகளின்போது நீர்நிலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவங்கள் ஏற்படுத்தியுள்ளன.
